பஹல்காம் தாக்குதல் | சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். ”இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும் உடந்தையாக உள்ளது” என இந்தியா குற்றஞ்சாட்டியிருந்தது. அதற்குப் பாகிஸ்தான், ”இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது. பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்” எனத் தெரிவித்திருந்தது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கெடுபிடிகளை விதித்துள்ள நிலையில், பதிலுக்கு அந்த நாடும் விதித்துள்ளது. இதனால், இரு நாட்டு எல்லை தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ”பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை” என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ”பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை. சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானைத் தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால், இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். தாக்குதலை வைத்து, இந்திய அரசு நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியிருப்பது உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்கான ஒரு சாக்கு. லஷ்கர்-இ-தொய்பா செயலிழந்து உள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ அதற்கு எந்த திறனும் இல்லை. அவர்களுக்கு பாகிஸ்தானில் எந்த அமைப்பும் இல்லை. அவர்களில் எஞ்சியிருப்பவர்கள் அனைவரும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், சிலர் காவலில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே கோரிக்கையை, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் வைத்துள்ளார். அவர், ”நம்பகமான விசாரணைகள், ஆதாரங்கள் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. நிரந்தரமான பழியை சுமத்த வேண்டும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு தான் பஹல்காம் சம்பவம். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.