பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு நடனமாடிய பள்ளி அங்கீகாரம் ரத்து
பாகிஸ்தானில் தனியார் பள்ளி ஒன்றில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனமாடியதால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் சிலர் இந்திய பாடலுக்கு நடனமாடினர். நடனத்தின் முடிவில் இந்திய தேசியக்கொடி திரையில் காட்டப்பட்டது. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு சிந்து மாகாண தனியார் பள்ளி பதிவு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பள்ளியின் உரிமையாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்காததால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து தனியார் பள்ளி பதிவு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி விழாக்களில் இந்திய கலாசாரத்தை ஊக்குவிப்பது, பாகிஸ்தானின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவேதான் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.