‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி

‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி

‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி
Published on

வர்த்தகத்திற்கு அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ள நிலையில், தாங்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் இந்தியாவையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ‌அருண் ஜெட்லி, “தூதரகங்கள் மூலமாக பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும். பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும். அத்துடன் பாகிஸ்தானுக்கு அளித்து வந்த வர்த்தக ரீதியில் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்த்தையும் இந்தியா ரத்து செய்துள்ளது” என்று தெரிவித்தார்.  

அனுகூலமான நாடு அந்தஸ்த்து ரத்தாவதன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுடன் எளிதில் வணிகம் செய்ய முடியாது. அதாவது பாகிஸ்தான் உடனான வணிகத்திற்கு இனிமேல் இந்தியா கட்டுபாடுகள் விதிக்கலாம். இந்த அந்தஸ்த்து உலக வர்த்தக மையத்தில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்தியா பாகிஸ்தானுக்கு இந்த அந்தஸ்த்தை கடந்த 1996 ஆம் ஆண்டு வழங்கியது. 

இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமரின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவுத், “பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியில் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது. பாகிஸ்தான் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்காது. ஆலோசனைக்கு பின்னரே எங்கள் பதில் முடிவை அறிவிப்போம்”எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பாகிஸ்தானின் நிதித்துறை அமைச்சக அதிகாரி “இந்த அனுகூலமான நாடு அந்தஸ்த்து ரத்தானது பாகிஸ்தானை அதிகம் பாதிக்காது. ஏனென்றால், இந்தியாவும் பாகிஸ்தானும் 2 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம் மட்டுமே நடைபெற்று வருகின்றது. இது பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்குதான். அதனால் பாகிஸ்தானின் வர்த்தகத்தில் அதிகளவு பாதிப்பு இருக்காது” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com