பாகிஸ்தானில் தீராத அரசியல் குழப்பம்: நவாஸின் சகோதரருக்கு கடும் எதிர்ப்பு
பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷரீபை நியமிக்கும் திட்டத்துக்கு இம்ரான்கான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட ஷாகித் அப்பாஸி சில மணி நேரத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே, நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷரீபை பிரதமராக நியமிக்கும் திட்டத்திற்கு இம்ரான்கான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஷாபாஸ் ஷெரீப் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாததால், அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வரை மட்டும் தான் ஷாகித் அப்பாஸி பிரதமராக இருப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருக்கும் ஷாபாஸ் பிரதரமாகப் பதவியேற்றால், அது இன்னொரு பரம்பரை ஆட்சிக்கே வழிவகுக்கும் என்று இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.