காஷ்மீர் பிரச்னை குறித்து ஐ.நா பொதுச் செயலாளரிடம் பேசிய இம்ரான் கான்

காஷ்மீர் பிரச்னை குறித்து ஐ.நா பொதுச் செயலாளரிடம் பேசிய இம்ரான் கான்
காஷ்மீர் பிரச்னை குறித்து ஐ.நா பொதுச் செயலாளரிடம் பேசிய இம்ரான் கான்

காஷ்மீர் பிரச்னை குறித்து ஐநா பொதுச் செயலாளரிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் தொடங்கிய விரிவான அமைதி பேச்சுவார்த்தையை, இந்தியா நிறுத்திக் கொண்டது. அதன் பின் பாகிஸ்தான் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட பிறகும், பயங்கரவாதத்தை ஒழித்தால் மட்டுமே, பேச்சுவார்த்தையை தொடர முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வந்தது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றது முதல், இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தானுடன் நட்புறவை நாட இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், அதற்கு பிரதிபலனாக இரு அடிகளை நாங்கள் எடுத்து வைப்போம் என இம்ரான் கான் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார். அதோடு, நிறுத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதி இருந்தார். 

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். குத்தேரேஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜர்ரிக் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், இருவரும் என்னப் பேசிக் கொண்டார்கள் என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. 

இதுதொடர்பாக பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில், “பொதுச் செயலாளர்கள் நாடுகளின் தலைவர்களிடம் பேசுவது என்பது வழக்கமான விஷயம்தான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி நாங்கள் ஒரு கண்காணிப்பு அமைப்பு” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com