பாகிஸ்தான் | தன் தாய்க்கு 2வது திருமணம் செய்துவைத்த இளைஞர்.. குவியும் பாராட்டுகள்!
பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர், தனது தாயிற்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அப்துல் அஹாத் என்ற அந்த இளைஞர், தனது தாயின் திருமண நிகழ்வு வீடியோவை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. தனது தாய், தனக்காக முழு வாழ்க்கையையே தியாகம் செய்ததாக குறிப்பிட்ட அப்துல், தனது தாய் அவரது வாழ்க்கையை வாழவேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும், அதைக் கருத்தில்கொண்டு, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், "கடந்த 18 ஆண்டுகளாக, என்னால் இயன்றவற்றை செய்து அவரது வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற கடுமையாக முயற்சித்து வருகிறேன். அவரும் எங்களுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார். எனது தாயார் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர். எனவே ஒரு மகனாக, நான் சரியானதை செய்தேன் என்றுதான் நினைக்கிறேன். 18 ஆண்டுகளுக்குப் பிறகு காதலிலும், வாழ்க்கையிலும் இரண்டாவது வாய்ப்பைப் பெற என் தாயாரை ஆதரித்தேன்" என்றார். அப்துல் அஹாதின் இந்த முற்போக்கான செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.