வான்வெளியை மூடிய பாகிஸ்தான்.. 2 மாதத்தில் ரூ.127 கோடி இழப்பு!
வான்வெளியை மூடிய பாகிஸ்தான்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே உறவு விரிசல் பெற்றது. இதன் காரணமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானோ, இந்திய விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நோக்கில் தனது வான்வழியை மூடியது. குறிப்பாக, பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 24 முதல் ஜூன் 20 வரை தன் வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியது. அது, இன்றுவரை தொடர்கிறது. இதனால், இந்திய விமானச் சேவைகள் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்தன. இதன்விளைவாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு 127 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சுமார் 100-150 இந்திய விமானங்கள் பாதிக்கப்பட்டன.
ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை.. ரூ.127 கோடி இழப்பு
அதாவது, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் தனது வான்வெளியை மூடிய இரண்டு மாதங்களில் பாகிஸ்தான் ரூ.127 கோடி நிதி இழப்பைச் சந்தித்ததாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தேசிய சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழப்புகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் டாலர் 508,000 இலிருந்து 2025இல் டாலர் 760,000 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை அதிகப்படியான விமானக் கட்டணங்கள் மூலம் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் வருவாய் சரிந்தது. இருப்பினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதாரத்தைக் கருத்தில்கொள்ளாமல் இறையாண்மையும் தேசியப் பாதுகாப்பும் முன்னுரிமை பெறுகின்றன என்று கூறி இழப்புகளை நியாயப்படுத்தியது. அதேநேரத்தில், மாற்றுப்பாதையில் சுற்றிச் சென்றதால், இந்திய விமான நிறுவனங்களும் எரிபொருளுக்காக கூடுதலாகத் தொகையைச் செலவிட நேரிட்டது. முன்னதாக, 2019ஆம் ஆண்டில், எல்லை தாண்டிய பதற்றங்கள் காரணமாக வான்வெளி மூடப்பட்ட பிறகு பாகிஸ்தான் டாலர் 54 மில்லியன் இழப்பைச் சந்தித்ததாகச் செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தானுக்குத் தடை நீடித்த இந்தியா
இதேபோல், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் விமானங்களுக்கான தடை மே 24 அன்று முடிவடையவிருந்தது. பின்னர் அது முதலில் ஜூன் 24 வரையும் பின்னர் ஜூலை 24 வரையும் நீட்டிக்கப்பட்டது. தற்போது அது, ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. "பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைவதைத் தடுக்கும் விமான வீரர்களுக்கான அறிவிப்பு (NOT AM) அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 23, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் 'X' பதிவில் தெரிவித்துள்ளார். "இந்த நீட்டிப்பு தொடர்ச்சியான மூலோபாய பரிசீலனைகளை பிரதிபலிக்கிறது மற்றும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
ஒருநாட்டின் வான்வெளியை பயன்படுத்துவதற்கு ஓவர் ஃப்ளையிங் எனப்படும் அந்நாட்டின் மீது பறப்பதற்கான கட்டணம் செலுத்தப்படுவது வழக்கம். அதாவது ஒருநாட்டின் வான்வெளியில் பறக்கும்போது அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் வழிகாட்டுதல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும். அதற்காக, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிப்படி இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிந்து நதிநீர் நீர் நிறுத்தியதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஏப்ரல் 24 முதல் ஜூன் 20 வரை தன் வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியது குறிப்பிடத்தக்கது.