ஆப்கன் எல்லையில் கம்பி வேலி அமைக்கும் பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் எல்லையில் கம்பிவேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானில் சமீபகாலங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கங்களே காரணம் என்று அந்நாடு புகார் கூறியது. இதனால், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களை ஒடுக்க அந்நாடு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியிருந்தது. இந்த நிலையில், தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க 2,500 கி.மீ நீளமுள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் கம்பிவேலி அமைக்கும் பணிகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள இடங்களில் கம்பிவேலி அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி உமர் ஜாவேத் பாஜ்வா தெரிவித்துள்ளார். தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க வழக்கமான விமானப்படை கண்காணிப்புடன் கூடுதல் கண்காணிப்பு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.