பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு.. 3 பிரதமர்களின் கட்சிகளில் யாருக்கு அரியணை?

பாகிஸ்தானில் இன்று நாடு முழுவதும் பொதுத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் தேர்தல்
பாகிஸ்தான் தேர்தல்ani

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு

அண்டை நாடான பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் கட்சி, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. பின்னர் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்ற நிலையில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். அவருடைய ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் சார்பில் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது ஆட்சிக்காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசு அமைக்கப்பட்டது. தவிர, நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு

இதையடுத்து, இன்று (பிப். 8) பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி, காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் காவல் துறையினர், ராணுவ வீரர்கள், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள் என சுமார் 6.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தேர்தல்
நாளை பொதுத்தேர்தல்: இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகள்.. அச்சத்தில் பாகிஸ்தான்!

பாகி. தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள்: 

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்காளர்கள் உள்ளனர் எனவும், இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்று நடைபெறும் தேர்தலில், மொத்தமாக 17,816 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், அவர்களில் 12,695 பேர் மாகாண சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 5,121 பேர் தேசிய சட்டமன்றத்திற்கும் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்களும் பாகிஸ்தானில் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. நேற்று (பிப்.7) பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாகுதலில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

இந்நிலையில், இன்று (பிப். 8) தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள கைபவர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கிரஹ அஸ்லாம் வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாகிஸ்தான் போலீசாரின் வாகனம் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தன தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 பாகிஸ்தான் போலீசார் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கு முன்னதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி, உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் தேர்தலில் போட்டியிடாதவகையில் சில வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் 100 பில்லியன் டாலரைத் தாண்டிய சொத்து மதிப்பு: ஒரேவருடத்தில் சரிவை மீட்ட கெளதம் அதானி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com