மனைவி பற்றிய கவலை.. இம்ரான் கானின் சிறைவாசம் குறித்து மகன்கள் சொல்வது என்ன?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் நலமுடன் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது மகன்களான சுலைமான் ஈசா கான் மற்றும் காசிம் கான் இருவரும், தந்தையிடம் தொலைபேசியில் பேசி உள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு இப்போதுதான் அவர்கள் மீண்டும் பேசியுள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலவற்றில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலாவில் தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, கடந்த ஆண்டின் இறுதியில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில், இம்ரான் கானின் மரணம் பற்றிய வதந்தி செய்திகள் உலகம் முழுவதும் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதனை, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்திருந்தது.
அதைத் தொடர்ந்து, சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்து வருவதாகவும், அவரது கண்பார்வை குறைந்து வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியாகின. இதையடுத்து 14 கிரிக்கெட் கேப்டன்கள் இம்ரான் கானுக்கு 'உடனடி மருத்துவச் சிகிச்சை' வழங்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில், அவருக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது மகன்களான சுலைமான் ஈசா கான் மற்றும் காசிம் கான் இருவரும், தந்தையிடம் தொலைபேசியில் பேசி உள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு இப்போதுதான் அவர்கள் மீண்டும் பேசியுள்ளனர்.
தன் தந்தையின் உடல்நிலை குறித்து அவர்கள், “அவர் நலமாக இருப்பதாகவும் கண்பார்வை சற்று மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், அவர் தனது மனைவியின் நிலை குறித்து கவலைப்பட்டார். காரணம், அவரைப் போலவே அவரது மனைவியும் மிகவும் மோசமான உடல்நலப் பாதிப்புடன் இருக்கிறார். எனது தந்தையை, அமைதியாகச் சிறைக்குள் முடக்கிவைத்து, அவருடைய அரசியல் இயக்கத்தின் வலிமையைச் சிறிது சிறிதாகக் குறைத்துவிட ஆட்சியாளர்கள் முற்படுகிறார்கள். அவர் படிப்பதற்குப் புதிய புத்தகங்கள் வழங்கப்படுவதில்லை. சிறை அறையின் மின் இணைப்பைத் துண்டிக்கின்றனர். எனினும், சிறைவாசமானது அவரை மனரீதியாக இன்னும் வலிமைமிக்கவராக மாற்றியுள்ளது; மேலும் அவர் தியானப் பயிற்சியை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறார். சிறைச்சாலையின் சூழல் எவ்வளவு கடுமையாகவும் கொடூரமாகவும் இருந்தாலும் சரி, அதை இப்படித்தான் கடக்க வேண்டும் என்ற ஒரு மனநிலையில் உள்ளார். அவருக்கு அவ்வப்போது நினைவிழப்பு ஏற்படுகிறது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டிலிருந்து இம்ரானின் மகன்கள் தங்கள் தந்தையைப் பார்க்கவில்லை. பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான விசாக்களுக்காக அவர்கள் இன்றும் காத்திருக்கின்றனர்.

