இம்ரான் கானுக்கு என்ன ஆனது? 20 லட்சம் தொண்டர்கள் களத்தில்.. எச்சரிக்கை விடுத்த பிடிஐ!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலவற்றில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலாவில் தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, அவருடைய மரணம் பற்றிய வதந்தி செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதனை, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்திருந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இம்ரான் கான் பற்றிய மரணம் பற்றிய வதந்தி செய்தி இணையத்தைக் கலக்கி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு..
பாகிஸ்தானிய பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கைதான் இந்தப் பரபரப்புக்குக் காரணமாகி இருக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அந்தப் பத்திரிகையாளர், "மூன்று மூத்த இராணுவ வட்டாரங்கள், இம்ரான் சிறையில் இறந்திருக்கக்கூடும்” என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தச் சரிபார்க்கப்படாத ஒரு தகவல், பதற்றமான ஒரு தருணத்தில் வெளிப்பட்டுள்ளது. இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில், அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரும், பிடிஐ கட்சியினரும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இம்ரானின் குடும்பத்தினருக்கும் மருத்துவர்களுக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால், அதற்கு முன்பே போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அக்கட்சி அச்சுறுத்தியுள்ளது.
இதற்காக 20 லட்சம் வீரர்கள் தயாராக இருப்பதாகவும், செப்டம்பர் 27 அன்று இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி நடைபெறும் எனவும் பிடிஐ தலைவர் சோஹைல் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாகிஸ்தானிய பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான், தனது கூற்றைத் திரும்பப் பெற்றுள்ளார். பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர் என்று கருதப்படும் அசிம் முனீருக்கும், இம்ரான் கானுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பகை இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதை மனதில் வைத்தே தற்போது உயரிய பொறுப்பில் இருக்கும் அசிம் முனீர், இம்ரானைப் பழிவாங்குவதாகக் கூறப்படுகிறது.

