சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு தூக்குத்தண்டனை
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கை 4 நாள்களில் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவருக்கு தூக்குத்தண்டனை விதித்து அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்த 7வயது சிறுமி ஷாயினப் அன்சாரி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்த சிறுமியின் சடலம் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருந்தது. ஓராண்டில் தொடர்ந்து 12வது பாலியல் வன்கொடுமை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். சிறுமி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், 24 வயது இளைஞர் இம்ரான் அலி என்பவரை கைது செய்தனர்.
7 வயது சிறுமி உள்பட பாலியல் வன்கொடுமையால் இறந்த 8 பேரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ, இம்ரான் அலியோடு ஒத்துப்போவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 நாள்களாக வழக்கை விசாரித்தனர்.பின்னர் இம்ரான் அலிக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக 4 நாளில் வழக்கு விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. தண்டனைவிதிக்கப்பட்ட இம்ரா அலி, மேல்முறையீடு செய்ய 15 நாள்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.