பலூசிஸ்தான் சுதந்திர தினம்.. பாகிஸ்தான் தாக்குதலில் 30 பேர் பலி.. உச்சத்தை எட்டிய மோதல்!!
அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். இந்தப் பலுசிஸ்தான், தங்களை பாகிஸ்தான் அரசு புறக்கணிப்பதாக கூறி, அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால், இந்தப் போராட்டத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் பலூச் விடுதலைப் படை யின் பின்னணியில், பயங்கரவாதிகள் இருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி, இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அரசு, ராணுவம் மூலம் ஒடுக்கி வருகிறது.
இந்தச் சூழலில்தான், பலுசிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டதாகவும், தங்களைத் தனி நாடாக ஐநா அங்கீகரிக்க வேண்டும் என்றும் பலூச் விடுதலைப் படையினர் சமீப காலமாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்தக் கருத்தை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இதற்கிடையில், பலூச் விடுதலை படை (BLA) ஆகஸ்ட் 11-ஆம் தேதியை “பலுசிஸ்தான் சுதந்திர தினமாக” அனுசரிக்க வேண்டும் என உலகம் முழுவதும் வாழும் பலூச் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேசமயம், பலுசிஸ்தான் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை சர்வதேச கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இந்த நாளில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தது.
அதன்படி, ஆகஸ்ட் 11-ம் தேதியான நேற்று பலுசிஸ்தானில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று இரவு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை பாகிஸ்தான் ராணுவம் சுராப் மற்றும் காதர் உள்ளிட்ட இடங்களில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்தத் தாக்குதல்கள் தீவிரவாதிகளின் இடங்களைக் காட்டிலும் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தில் தாக்குதலையடுத்து கோபடைந்த பலூச் விடுதலைப் படையினர், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சகாய் மாவட்டத்தில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒரு காவல் நிலையம் அழிக்கப்பட்டதாகவும், இதில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இவ்வாறு, பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பலூச் விடுதலை படைக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பலுசிஸ்தானில் பதற்றம் தீவிரமடைந்திருக்கிறது.

