கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்ட வாக்கெடுப்பு - தற்காலிகமாக தப்பியது இம்ரான் கான் அரசு!

கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்ட வாக்கெடுப்பு - தற்காலிகமாக தப்பியது இம்ரான் கான் அரசு!
கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்ட வாக்கெடுப்பு - தற்காலிகமாக தப்பியது இம்ரான் கான் அரசு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வரலாறு காணாத பணவீக்க சூழல் நிலவி வருகிறது. இந்த நிலைமைக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், பதவி விலக இம்ரான் கான் மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீஸை நாடாளுமன்ற செயலரிடம் கடந்த 8-ம் தேதி எதிர்க்கட்சிகள் வழங்கின. எனினும், நாடாளுமன்றக் கீழ் அவையில் இம்ரான் கானுக்கு போதிய பலம் இருந்ததால் அவரது அரசு கவிழாது என்ற சூழல் இருந்து வந்தது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் முயற்சியால் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த சில கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் இம்ரான் கான் அரசு கவிழும் சூழல் உருவானது.

இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கியதும், ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த சூழலில், எம்.பி.யின் இறப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக வரும் திங்கள்கிழமை (மார்ச் 28) மாலை 4 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் முடிவை அவைத் தலைவர் திரும்பப் பெறவில்லை. இதனால் தற்காலிகமாக இம்ரான் கான் அரசு தப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com