பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் குல்சார் அகமது?

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் குல்சார் அகமது?
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் குல்சார் அகமது?

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான குல்சார் அகமதை நியமிக்க தற்போதைய பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கானே காரணம் என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றக் கீழ் அவையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாக் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 23 பேர் அவரது அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இந்த சூழலில், அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 13 உறுப்பினர்கள் வாபஸ் வாங்கியதால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், நேற்று இந்த வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அவைத் தலைவர் அறிவித்தார். இதனால் வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால் மூன்று மாதங்களில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக அங்கு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை இடைக்கால பிரதமராக நியமிக்குமாறு அதிபர் ஆரிஃப் அகமதுக்கு இம்ரான் கான் இன்று பரிந்துரைத்துள்ளார்.

பதவியில் இருக்கும் பிரதமரின் பரிந்துரையை ஏற்று இடைக்கால பிரதமரை நியமிக்க பாகிஸ்தான் அதிபருக்கு அரசமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. ஒருவேளை, குல்சார் அகமது இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டால், அவர் முறைப்படி பதவியேற்கும் வரை பிரதமர் பதவியில் இம்ரான் கான் நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com