பாகிஸ்தான் | வெடித்த வன்முறை.. TLP கட்சி முடக்கம்.. பஞ்சாப் அரசு நடவடிக்கை!
பஞ்சாப் அரசாங்கம், தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் (TLP) அமைப்பைக் கட்டுப்படுத்த தீர்க்கமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
காஸாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கிய போராட்டம் அக்டோபர் 11ஆம் தேதி தீவிரமடைந்தது, அப்போது பஞ்சாப்பின் முரிட்கேயில் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் (TLP) எதிர்ப்பாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டது. கட்சித் தலைவர் சாத் ஹுசைன் ரிஸ்வி தலைமையிலான குழு, லாகூரில் இருந்து முன்னேறியதால் பாதுகாப்புப் படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைக் கலைத்தனர். இந்த வன்முறையின்போது, TLP உறுப்பினர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாக TLP உடன் தொடர்புடைய சுமார் 170 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, குறைந்தது மூன்று போராட்டக்காரர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் உயிரிழந்ததாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் அரசாங்கம் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பைக் கட்டுப்படுத்த தீர்க்கமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்லாமியக் கட்சியை, தீவிரவாத அமைப்பு என்று அழைத்ததுடன், நாட்டின் மூன்றாவது பெரிய மதக் கட்சியான TLPஐ தடை செய்ய பரிந்துரைத்துள்ளது. பஞ்சாப்பின் முதல்வரான மரியம் நவாஸ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட சட்டம் ஒழுங்கு கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட இந்த முடிவில், அனைத்து TLP சொத்துகளையும் பறிமுதல் செய்யவும், அதன் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் சுவரொட்டிகள், பதாகைகள் பயன்படுத்தவும், அதன் கட்சித் தலைவர்களை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடக்குமுறையின் ஒரு பகுதியாக, ஆவணமற்ற ஆப்கானியர்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை குறிவைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இது ஒரு காலத்தில் அமைப்புக்குள் உள்ள பிரிவுகளால் ஆதரிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான மிகக் கடுமையான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.