மறைந்த அமெரிக்க ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த ஓவியம் ஒன்று நியுயார்க்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 110.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
இந்திய மதிப்பில் இந்த ஓவியத்தின் விலை சுமார் 714 கோடி ரூபாய். ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய விலையுயர்ந்த ஓவியத்தை விடவும் இந்த ஓவியம் இருமடங்கு விலையாகும். தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்துள்ள ஜப்பானிய தொழிலதிபரும், தொன்மையான படைப்புகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவருமான யுசாகு மெசாவாதான், ஒரு வருடத்திற்கு முன்பும், ஷான் மிஷெலின் ஓவியத்தை விலைக்கு வாங்கியவர்.
மேலும், அமெரிக்க ஓவியர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே, ஷான் மிஷெலின் இந்த ஓவியம்தான் அதிகமான விலைக்கு விற்பனையானது என்னும் சாதனையை படைத்துள்ளது.
கருப்பின ஓவியர் கலைப்படைப்புகளில், மிக அதிகமான விலையுடைய படைப்பு இது. 1980ம் ஆண்டிலிருந்து 100 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ள முதல் ஓவியம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.