26 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு?

26 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு?

26 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு?
Published on

26 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகமாக ஃபேஸ்புக் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு செயலி ஃபேஸ்தான் என சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பயனாளர்கள் பலரும் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் பலவற்றை இதில் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஃபேஸ்புக்கில் இருந்து பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுப்பட்டு வருகின்றன. இந்த வகையில் Comparitech என்ற தளத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கடந்த 2-ஆம் தேதி, சுமார் 26 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட இணையதள பக்கத்தில் கிடைத்ததை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானார்.

ஹேக்கர்கள் தீவிரமாக இயங்கும் தளம் ஒன்றிலும் இந்தத் தகவல்கள் எளிதில் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்ததாக அவர் புகார் எழுப்பினார். ஆனால் தற்போது அந்த இணையதள பக்கமே நீக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதற்கு முன்பாகவே இந்தத் தகவல்கள் அனைத்தும் பலருக்கு கிடைத்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்படுவதாக, விளம்பர மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு தகவல் திருட்டு நடந்திருக்கிறது.

வியட்நாமில் இயங்கும் ஹேக்கர்கள் ஃபேஸ்புக் தகவல் தரவு தளத்தில் ஊடுருவி இந்தத் தகவல்களை பெற்றிருக்கலாம் என அச்சம் எழுப்படுகிறது. பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களே இதில் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பேஸ்புக் Profile Settingஇல் Public என வைத்திருப்பவர்களின் தரவுகள் எளிதில் திருடப்படுவதாக தெரிகிறது.

எனவே ஃபேஸ்புக் பயனாளர்கள் profile settingல் நண்பர்களுக்கு மட்டுமே தகவல்கள் தெரியும் வகையில் மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல ஃபேஸ்புக்கை தவிர பிற தளங்களில் புரோஃபைலை இணைக்கலாமா என்ற கேள்விக்கு ‘வேண்டாம்’ என்றே பதில் கொடுக்க வேண்டும், சந்தேகத்துக்குரிய வகையில் வரும் தகவல்களை பார்க்க வேண்டாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக் பயனாளர்கள் அடிக்கடி பாஸ்வேர்ட்டை மாற்ற வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com