\
Over 100 Names Rape Claims Inside Silicon Valleys Secret Whisper Network
silicon valley reuters

முதலீட்டாளர்கள் டு AI உலகம்.. சிலிக்கான் வேலியை அதிரவைக்கும் பெண்களின் ரகசிய ‘Whisper Network'!

சில பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் தொழில்நுட்ப உலகின் முக்கிய மையமாக விளங்கும் சிலிக்கான் வேலியில், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்களை பெண்கள் ஒருவருக்கொருவர் ரகசியமாக பகிர்ந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட பெயர்கள் அடங்கிய தனிப்பட்ட ஆவணம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

file photo
file photo reuters

இந்த தகவலை சிலிக்கான் வேலியில் உள்ள நபர்களை மேற்கோள் காட்டி New York Post செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய சில முக்கிய நபர்களின் பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன இருக்கிறது அந்த ரகசிய பட்டியலில்?

Whisper Network என்று அழைக்கப்படும் இந்த ரகசிய அமைப்பில், பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து மற்ற பெண்களிடம் எச்சரிக்கை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள புகார்கள், போதைப்பொருள் கொடுத்து மயக்குவது, பாலியல் அத்துமீறல் முதல் வன்புணர்வு வரையிலான தீவிர குற்றச்சாட்டுகள் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

file photo
file photo reuters

20 வயதுகளில் இருக்கும் ஒரு தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தப் பட்டியலை முதன்முதலில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். அதில் பிரபல முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்களைக் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணும் தனது அனுபவம் தொடர்பான குற்றச்சாட்டை அந்த வட்டாரத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

சில பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிலிக்கான் வேலி போன்ற தொழில்துறை வட்டாரங்களில் சக்திவாய்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு எதிராக புகார் அளித்தால், தங்களுடைய பணி சார்ந்த வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.

silicon valley
silicon valley reuters

நியாயம் கேட்டு புகார் அளித்து அது நிரூபிக்கப்படாவிட்டால், நகரில் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து தாம் ஒதுக்கப்படலாம் என்று பயந்தேன் என பெண் ஒருவர் கூறியதாக New York Post தெரிவித்துள்ளது.

Zette நிறுவனத்தின் நிறுவனர் யெஹாங் ஜூ, கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் தாக்குதல் குறித்து பொதுவெளியில் பேசியுள்ளார். அவர் 2021 டிசம்பரில் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முயன்றபோது சிலர் அந்த நபருடன் தங்களுக்கு இருந்த தொழில் மற்றும் நட்பு தொடர்புகளை காரணமாகக் கூறி தலையிட மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெண் ஒருவர், தான் போதைப்பொருள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்ததாக கூறியுள்ளார். அதன்பின்னர் சில பெண்கள் அதே நபர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்கள் ஒன்றாகச் சென்று நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், அந்த நபர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அந்த ஆவணங்களில் இருப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

file photo
file photo reuters

சிலிக்கான் வேலியில் மட்டுமல்லாமல், நெருக்கமான தொழில்நுட்ப சமூகங்களில் பாலியல் அத்துமீறல்கள் குறித்த விவாதங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

முன்னதாக 2022-ல் AI ஆராய்ச்சியாளர் கீர்த்தனா கோபாலகிருஷ்ணன் Effective Altruism சமூகத்தில் பாலியல் அழுத்தம் தொடர்பான தனது கவலைகளை எழுதியிருந்தார்.

இந்நிலையில், சிலிக்கான் வேலியின் ரகசிய ‘Whisper Network’ குறித்த தகவல்கள் மீண்டும் தொழில்நுட்பத் துறையில் பாதுகாப்பு, புகார் அளிக்கும் நடைமுறைகள் மற்றும் அதிகார உறவுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

Over 100 Names Rape Claims Inside Silicon Valleys Secret Whisper Network
200 ஆண்டுகளில் முதல்முறை.. மரண தண்டனை எதிர்கொண்ட முதல் பெண்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com