ஆப்பிரிக்காவுக்கு வெளியே... சீனாவில் கண்டெடுக்கப்பட்ட குரங்குப் புதைபடிவங்கள்
கோப்புப் படம்
சீனாவில் உள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் அறிவியல் ஆய்வாளர்கள் 6.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குரங்குகளின் புதைபடிவங்களைக் கண்டெடுத்துள்ளனர். அதுபோன்ற குரங்கு இனங்கள் தற்போது ஆசிய நாடுகளில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவின் தென்கிழக்கு யுனான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் தோண்டும் பணியின்போது பழங்கால குரங்கு இனத்தின் புதைபடிவச் சான்றுகள் கிடைத்துள்ளன. இதுபற்றிப் பேசும் பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வாளர் நினா ஜி. ஜெப்லான்ஸ்கி, " இவை ஆப்பிரிக்காவுக்கு வெளியே கிடைத்துள்ள மிகப் பழைமையான புதைபடிவங்கள்" என்றார்.
மேலும், "புதைபடிவங்களில் காணப்படும் குரங்கு இனங்கள் கிழக்கு ஆசியப் பகுதியில் வாழ்ந்துவரும் குரங்குகளுடன் நெருக்கமாக இருக்கின்றன" என்றும் தெரிவித்தார். இதுபற்றிய ஆய்வுக்கட்டுரை பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
புதைபடிவங்களில் தெரியும் எலும்புகளின் அளவை வைத்து ஆண், பெண் குரங்குகளின் அடையாளங்களும் ஆய்வாளர்களால் கணடறியப்பட்டுள்ளன. அப்போது வாழ்ந்த பழங்கால குரங்குகள் மற்றும் ஏப்ஸ் வகை குரங்குகள் இரண்டுக்கும் உணவுமுறையில் இருந்த வேறுபாட்டைக்கூட விவாதித்துள்ளார்கள். இந்த குரங்கு இனங்கள் கிரீஸ் நாட்டிலும் இருப்பதாக ஆய்வின் முடிவில் அறியவந்துள்ளது.