அமெரிக்க தேர்தலில் அதிர்ச்சி.. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி ஆதிக்கம்.. ட்ரம்புக்கு பெரும் சரிவு!
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் செனட் சபைக்கும் (Senate) மாகாண ஆளுநர் பதவிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று இரவு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உடனடியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
இதில் செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கு நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது வரை செனட் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களை (தற்போதுவரை 53 இடங்களில் வெற்றி) ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னர் செனட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 45 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 48 இடங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியாகும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையும் தற்போது உள்ளது. அதே நேரம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி இந்த இடைத்தேர்தலில் தற்போதுவரை 6 இடங்களை இழந்துள்ளது.
மேலும் நாடாளுமன்றத்தின் மற்றொரு அவையான பிரதிநிதிகள் சபையையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்கள் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களைவிட அதிகமாக, 223 இடங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. ஆளும் கட்சியான ட்ரம்பின் குடியரசுக் கட்சி 130 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுமார் 100 தொகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வலுவான பெரும்பான்மையை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மாகாண ஆளுநர்களுக்கு நடைபெற்ற தேர்தலிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கமே உள்ளது. 24 மாகாண ஆளுநர்கள் பதவியை ஜனநாயகக் கட்சி வென்றுள்ள நிலையில், ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சட்டங்களுக்கு தடை விதிக்கவும், அவரது அரசின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் மீது விசாரணைகளை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இனி ட்ரம்ப் அரசாங்கத்தால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், இந்த முடிவுகளின் தாக்கம் வரும் 2028-ம் ஆண்டில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

