”சிறுமியாக இருந்தபோது..” OpenAI நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் மீது சொந்த தங்கையே பாலியல் குற்றச்சாட்டு!
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவர்மீது அவருடைய தங்கையே பாலியல் குற்றச்சாட்டை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம் ஆல்ட்மேனின் தங்கை ஆன் ஆல்ட்மேன், தான் சிறுமியாக இருந்தபோது சாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் தனக்கு உளவியல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சாம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
1997 முதல் 2006வரை சாம் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ள ஆன், அதற்காக சாம் 1,50,000 அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மிசெளரி மாகாணத்தின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சாம், அவரது இரண்டு தம்பிகள் மற்றும் தாயார் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன் ஆல்ட்மேனின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளனர். அவர் மனநல பாதிப்பு காரணமாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற அபாண்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஆனால், ஆல்ட்மேனின் வழக்கறிஞர் ரியான் மஹோனி, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். “ஆல்ட் மேன் மனநோயுடன் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.