அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான உமர் அத்திக். புற்றுநோய் மருத்துவரான அவர் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்கன்சாஸ் கேன்சர் கிளினிக் என்ற மருத்துவ சிகிச்சை மையத்தை, ஆர்கன்சாஸ் மாகாணத்தின் பைன் பிளப் நகரில் நடத்தி வந்துள்ளார்.
அதில் ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவர் உமரிடம் சிகிச்சை பெற்ற 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவருக்கு 4.75 கோடி ரூபாயை கொடுக்க வேண்டி இருந்தது. நிலுவையில் உள்ள மருத்துவ கட்டணங்கள் குறித்து கணக்கிட்டபோது இதை அவர் அறிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து தனக்கு வராமல் இருந்த மருத்துவ கட்டண நிலுவையை ரத்து செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
அதை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையின் மூலமாக வாழ்த்து செய்தியாக தனது நோயாளிகளிடம் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவரின் செயலை அறிந்து கொண்ட உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
"பெரும்பாலான நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான தொகையை மருத்துவ காப்பீடுகள் செலுத்தி விடுகின்றன. இருப்பினும் சில நோயாளிகள் மருத்துவக் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனர். அது அவர்களுக்கு ஒரு சுமையாகவே தொடர்கிறது. நமது கிளினிக் அதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்கிறது. அதனால் நோயாளிகள் செலுத்தாமல் உள்ள கட்டணத்தை செலுத்த வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நிறைய நோயாளிகள் அவரது உடல் நலனோடு, பொருளாதார நலன் குறித்தும் எண்ணி வருந்துகிறார்கள். சிலர் மொத்த கையிருப்பையும் ஆரோக்கிய சீர்கேட்டால் இழந்ததையும் கேட்டிருக்கிறேன். அதை நான் உணர்ந்து கொண்டதால் எனது குடும்பத்தினருடன் பேசி இந்த முடிவை எடுத்துளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.