காஸாவுக்கு பழிவாங்க திட்டம்.. ஈரானுடன் தொடர்பு? துணை விமானியின் அதிர்ச்சிப் பின்னணி!
ஃபிளைதுபாய் விமானத்தில், துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மானி நடந்துகொண்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாகப் பல்வேறு தகவல்கள் புலனாய்வாளர்கள் விசாரணையில் வெளியாக வருகின்றன. அதேநேரத்தில், அவருக்கும் ஈரானுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஃபிளைதுபாய் விமானத்தில், துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மானி நடந்துகொண்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில், அவரைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை ரகசியமாகக் கொலை செய்யவும், விமானத்தின் இயந்திரங்களை அணைக்கவும், டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தின் அருகே பெரிய கட்டடம் அல்லது மற்றொரு விமானத்தின் மீது மோதச் செய்யவும் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அதேபோல், ஜூலை மாதத்திலேயே இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், கடைசிநேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் இதுகுறித்த தொடர் விசாரணையில், காஸா பகுதியில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்குப் பழிவாங்கும் நோக்கிலும், தியாகியாக மாறும் எண்ணத்துடனும் இத்தாக்குதலை நடத்தியதாக ஓமன் துணை விமானி தெரிவித்துள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் அவர் தனியாகச் செயல்பட்டாரா அல்லது இவருக்குப் பின்னணியில் வேறு ஏதானும் பயங்கரவாதக் குழுக்கள் இருக்கின்றனவா என்பதைத் தீர்மானிக்க, அதிகாரிகள் தற்போது அவரது தொலைபேசி, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தொடர்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அந்த விமானத்தில் இருந்த விமானப் பணிப்பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சதித்திட்டத்தில் அவர்களுக்குத் தொடர்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் புலனாய்வாளர்கள் இதுவரை கண்டறியவில்லை.

