சீன உளவாளியுடன் ரகசிய தொடர்பு! சிக்கிய என்விடியா CEO! அமெரிக்காவை உளவு பார்த்ததா சீனா?
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா CEO ஜென்சன் ஹுவாங், சீன உளவுத்துறையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக வெளியான தகவல்கள், தேசியப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார். ர
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவுத்துறையின் இலக்காக இருந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் ஜென்சன் ஹுவாங் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி யார் அந்தப் பெண்? என்விடியா CEO-விடம் இருந்து அமெரிக்காவின் ரகசியத் தகவல்களைச் சீனா பெற முயன்றதா? விரிவாகப் பார்க்கலாம்...
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக என்விடியா விளங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் என்விடியாவின் சிப்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், என்விடியாவின் அதிநவீன சிப்கள் சீனாவுக்குக் கிடைப்பதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இத்தகைய சூழலில், என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்கை சுற்றி வெளியாகியுள்ள உளவுக் குற்றச்சாட்டு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்ற பெண், சீனாவின் உளவுத்துறை அமைப்பான Ministry of State Security உடன் தொடர்புடையவராக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். இவர் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட Megaspeed என்ற நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றியவர். இந்த நிறுவனம் என்விடியாவிடம் இருந்து செயற்கை நுண்ணறிவு சிப்களை வாங்கும் வாடிக்கையாளராகவும் இருந்து வந்துள்ளது.
இதற்கிடையே, ஆலிஸ் ஹுவாங், என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொண்டதாகவும், அவர் மூலமாக அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பெற சீன உளவுத்துறை முயன்றிருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக என்விடியா நிர்வாகக் குழுவிடம் ஜென்சன் ஹுவாங் விளக்கம் அளித்தபோது, திருமணத்துக்கு வெளியேயான தனிப்பட்ட உறவு இருந்ததை ஒப்புக்கொண்டு, தனது குடும்பத்தினரிடமும் சக ஊழியர்களிடமும் மன்னிப்புக் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருப்பது, அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த உளவுக் குற்றச்சாட்டுகளைச் சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், சீனாவுக்கு எதிரான அவதூறு என்றும் தெரிவித்துள்ளார்.
