பாலியல் புகார் கூறிய மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: 16 பேருக்குத் தூக்கு!
பங்களாதேஷில் பாலியல் புகார் கூறிய மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், தலைமை ஆசிரியர் உட்பட 16 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் உள்ள ஃபெனி (Feni) நகரை சேர்ந்தவர் நுஸ்ரத் ஜகான் ரஃபி (19). அந்தப் பகுதியில் உள்ள மதராசா பள்ளியில் படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் சிராஜ் உத்-தவுலா, தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோவும் லீக் ஆனது. இந்த விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், நுஸ்ரத் பொய் புகார் அளித்ததாகக் கூறி, பள்ளி மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் தவுலாவை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, புகார் அளித்த சில நாட்களுக்கு பின் தேர்வு எழுத நுஸ்ரத் பள்ளிக்குச் சென்றார். அப்போது, பெப்பி என்ற அவரது தோழி, மொட்டை மாடிக்கு நுஸ்ரத்தை அழைத்துச் சென்றார். அங்கு அவருடன் படித்த 3 பேர் உட்பட 5 பேர், புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினர். அவர் மறுத்தார். ஆத்திரமடைந்த அவர்கள், நுஸ்ரத்தின் கை, கால்களைக் கட்டி அவர் மீது மண் எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். அவர், தன்னைக் காப்பாற்றும்படி அலறினார்.
பின்னர் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கிடையே இந்தக் கொலை வழக்கில், ஆளும் அவாமி லீக் கட்சியின் தொண்டர்கள், 2 பள்ளி மாணவிகள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு, டாக்கா உயர்நீதிமன்றத்தில் நேற்று வழங்கப்பட்டது. அப்போது, 16 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.