வடதுருவ ஒளி எனும் இயற்கையின் அதிசயம்.. மக்கள் வசதியாக காணும் வகையில் நார்வே புதிய முயற்சி
இயற்கையின் அதிசயமான 'வடதுருவ ஒளி'களை காண்பதற்காக, நார்வே நாடு உலகின் முதல் இரவுநேர முழுக்காட்சி ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
சூரியனில் இருந்து வெளிவரும் மின்னூட்டம் பெற்ற துகள்கள், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மோதும்போது வானில் உருவாகும் வண்ணமயமான ஒளி ஜாலமே வடதுருவ ஒளிகள் ஆகும்.. இவை பெரும்பாலும் துருவப் பகுதிகளில் பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் அலை அலையாகத் தோன்றி வியக்கத்தக்க இயற்கை அதிசயத்தை உருவாக்குகின்றன.
வடதுருவ ஒளிகள் நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ரஷ்யா போன்ற வடதிசை நாடுகளில் தோன்றும். இந்த வடதுருவ ஒளிகளைக் காண்பதற்காக நார்வே அரசு இரவுநேர முழுக்காட்சி ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயிலின் கூரை மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் முழுவதும் கண்ணாடியால் ஆனவை. இதனால் பயணிகள் பனி படர்ந்த மலைகளையும், வானில் தோன்றும் வட துருவ ஒளிகளையும் எவ்விதத் தடையுமின்றி ரசிக்க முடியும்.
இந்த ரயில் நார்வேயின் ட்ரொம்சோ (Tromso) மற்றும் நார்விக் (Narvik) ஆகிய பகுதிகளுக்கு இடையே பயணிக்கிறது. ஆர்க்டிக் வட்டத்துக்குள் செல்லும் இந்தப் பயணம் பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தருகிறது. குளிர் காலத்திலும் பயணிகள் இதமான வெப்பத்தில் அமர்ந்து இயற்கையை ரசிக்க இந்த ரயிலில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் பயணிக்கும்போது வானில் மின்னும் நட்சத்திரங்களையும், நிலவொளியில் ஜொலிக்கும் பனிப்பாறைகளையும் பார்க்க இது சிறந்த வழியாகும்.
முன்பு வடதுருவ ஒளிகளைப் பார்க்க கடும் குளிரில், திறந்த வெளியில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது இந்த சொகுசு ரயிலில் அமர்ந்துகொண்டே அந்த அற்புதக் காட்சியைப் பார்க்கலாம் என்பதால், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளிடையே இந்த ரயிலுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

