ஈரான் போர் | அமெரிக்காவின் அத்துமீறலுக்கு பதிலடி? வடகொரியா அதிபர் திட்டவட்டம்!
செய்தியாளர்: விக்கி
வட கொரிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், தனது நாடு அணு ஆயுதங்களைக் கைவிட மறுத்த முடிவு சரியானது என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல்கள், அணு ஆயுதங்களைத் தக்கவைத்துக் கொள்ள வட கொரியா எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டார். வட கொரியாவின் அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்து இனி மாற்ற முடியாதது என்றும், இதில் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்குப் பதிலாக வழங்கப்படும் பொருளாதாரச் சலுகைகளை ஏற்க முடியாது எனவும், அணு ஆயுதங்களே நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு உண்மையான உத்தரவாதம் என்றும் அவர் பேசினார். தென் கொரியாவைத் தனது நாட்டின் "மிகவும் விரோதமான நாடு" என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும், இனிமையான பேச்சுகளுக்கும் மயங்காமல் அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதே நாட்டின் வளர்ச்சிக்குச் சரியான வழி என்று அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், அணு ஆயுதங்கள் வெறும் போர் ஆயுதங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் பாதுகாப்புக் கேடயம் என்று கிம் கூறினார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய கிம், ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அணு ஆயுதங்கள் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சூழல் உலகிற்கு உணர்த்தியுள்ளதாகக் கூறினார். 2026-ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்தச் செலவில் 15.8 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்கு வடகொரியா ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் போருக்கு இடையே வட கொரியா அதிபரின் இந்த பேச்சு கவனம் பெற்று வருகிறது.

