ஒரே மாதத்தில் ஏழாவது முறை.. சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! மீண்டும் பரபரப்பு
கடந்த 2017- ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும்.
உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வடகொரியா. இந்நிலையில் வடகொரியா இந்த மாதத்தில் ஏழாவது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 2,000 கிலோமீட்டர் உயரத்தை எட்டியதாகவும், 800 கி.மீ தூரத்திற்கு 30 நிமிடங்கள் பறந்ததாகவும் ஜப்பானிய மற்றும் தென்கொரிய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த ஏவுகணை, ஜப்பான் கடலில் விழுந்தது. கடந்த 2017- ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும் என கூறப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொள்ள வடகொரியாவுக்கு ஐநா அமைப்பு கடுமையான தடைகளை விதித்துள்ளது. ஆனால் வடகொரியா இந்த தடைகளைத் தொடர்ந்து மீறி வருகிறது. இதற்காக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முயற்சி