பிற நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியாவின் ஏவுகணை வலிமை

பிற நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியாவின் ஏவுகணை வலிமை

பிற நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியாவின் ஏவுகணை வலிமை
Published on

சிறிய நாடான வடகொரியா வல்லரசு நாடான அமெரிக்காவுக்கும் அண்டை நாடுகளுக்கும் நேரடியாகச் சவால் விடுத்து வருகிறது. இப்போது ஜப்பானுக்கு மேல் ஏவுகணையை வீசியிருக்கிறது. அந்த நாட்டிடம் உள்ள ஏவுகணைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

உலக நாடுகளிடமிருந்து முற்றிலுமாகத் தனிமைப்பட்டிருக்கும் வடகொரியா, பலவகையான ஏவுகணைகளை வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அவற்றுள் ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் நோடோங், 2,200 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கும் டோபோடோங், நான்காயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் முசூடன், ஆறாயிரம் கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய டோபோடோங்- 2 ஆகியவை இந்த நாட்டிடம் இருக்கின்றன. 
இவை தவிர கேஎன்-14 என்ற ஏவுகணையை வடகொரியா அண்மையில் சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கவல்லது. வடகொரியாவின் இத்தகைய ஏவுகணைக் குவிப்பு, அருகேயிருக்கும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றை நெடுங்காலமாகவே கவலையடைச் செய்திருக்கிறது. தற்போதிருக்கும் ஏவுகணைகளில் குறைந்த தொலைவு தாக்கும் ஏவுகணையைக் கொண்டே ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளை வடகொரியாவால் தாக்கிவிட முடியும். இந்த நாட்டிடம் இருக்கும் இரண்டாவது பெரிய ஏவுகணையைக் கொண்டு அமெரிக்காவின் பிராந்தியமான குவாம் தீவைக்கூட தாக்கிவிட முடியும். 

நான்காயிரம் கிலோ மீட்டர் செல்லும் முசூடன் ஏவுகணை தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்கள் வரை செல்லும். இதேபோல் ஆறாயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் டோபோடோங் -2 ரக ஏவுகணையைப் பயன்படுத்தினால், அமெரிக்காவின் ஹவாய் தீவுகள், அலாஸ்கா வரையிலும் தாக்குதல் நடத்தலாம். வடகொரியா அண்மையில் சோதனை செய்த கே.என். ரக ஏவுகணைகள் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும். அவை அமெரிக்காவின் பெருநிலப்பரப்பு வரை தாக்க வல்லவை. இத்தகைய ஆபத்துகள் இருப்பதை உணர்ந்திருக்கும் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் பசிபிக் பிராந்தியத்தில் பல வகையான ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை வைத்திருக்கின்றன. வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் புறப்பட்டால் அவற்றை தன்னிச்சையாகவே கண்டறிந்து, இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் இவற்றுக்கு உண்டு. ஆயினும் இப்போது ஜப்பானுக்கு மேல் ஏவுகணைகளை அனுப்பியிருப்பதன் மூலம் வடகொரியா மீதான அச்சம் அதிகரித்திருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com