Kim Jong Un
Kim Jong Unfile

குண்டு துளைக்காத ரயில்.. கார் முதல் ஹெலிகாப்டர் வரை ரயிலுக்குள்; அச்சத்தில் வாழும் வடகொரிய அதிபர்?

அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும் கிம் ஜாங் உன்னின் குண்டு துளைக்காத ரயில் குறித்த தகவல்கள், கேட்போரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
Published on

ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக தனது கவச ரயிலில் ரஷ்யாவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார் வடகொரிய அதிபர் கிம். ஒரு சர்வதேச தலைவராக இருந்துகொண்டு 1,180 கிமீ தூரத்தை ரயிலில் 20 மணி நேரமாக பயணித்தது உண்மையில் ஆச்சரியமானதுதான்.

அப்படி என்னதான் அந்த ரயிலில் இருக்கிறது என்று தேடிப்பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள்தான் கிடைத்துள்ளன.

விமானத்தை விட மிகவும் பாதுகாப்பானதான கிம் கருதும் இந்த ரயில், சுமார் 90 பெட்டிகளை கொண்டது. கான்பிரன்ஸ் அறைகள், உணவு பரிமாறும் அறைகள், பார்வையாளர்கள் அமர பிரத்யேக அறைகளும் ரயிலில் அடங்கியுள்ளன. தொலைக்காட்சிகள், சேட்டிலைட் போன்கள், உயர் அதிகாரிகள் தங்க சொகுசு அறைகள் என்று பல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.

மேலும், குறிப்பிட்ட பெட்டிகளில் மட்டும் உயர் அதிகாரிகள் பயணிப்பார்கள் என்றும், அந்த பெட்டிகள் முழுவதும் பாதுகாப்பு வீரர்களின் கட்டுக்குள் இருக்கும் என்றும் தெரிகிறது. குண்டு துளைக்காத இந்த ரயில் உலோகத்தால் ஆனது. அதிகப்படியான இதன் எடை காரணமாக பயண வேகம் வெறும் 50 கிமீ மட்டுமே உள்ளது என்றும், அதிகபட்சமாக 60 கிமீ வேகம் செல்லும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, அதில் ஏற்படும் மாற்றங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. ரயிலில் இருக்கும் எந்த பெட்டியையும் குண்டு துளைக்காதாம். மேலும் ரயிலுக்கு யார் இருக்கிறார் என்பது தெரியாத வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும், செல்லும் வழியில் வெடிகுண்டுகள், ஆயுத அச்சுறுத்தல் ஏதும் இருக்கின்றனவா என்று ஸ்கேன் செய்யும் வசதியும் இதில் அடங்கியுள்ளதாக தெரிகிறது.

சொகுசு பயணம், பன்றிக்கறி, மீன், பிரெஞ்சு ஒயின், தொலைக்காட்சி, மியூசிக் என்று சகலமும் அடங்கிய இந்த ரெயிலில் மற்றுமொரு அசத்தலான அம்சமும் அடங்கியுள்ளது. அதன்படி கிம் ஜாங் உன்னின் சொகுசு காரையே ரயிலில் சாதாரணமாக ஏற்றலாம். மேலும் ஆபத்து காலத்தில் தப்பிக்க ஹெலிகாப்டரும் ரயிலுக்குள் உள்ளதாம்.!

விமான பயணத்தில் அப்பா கிம் ஜாங் இல், தாத்தா கிம் இல் சுங் ஆகியோரை தொடர்ந்து கிம்முக்கும் நம்பிக்கை இல்லாததால் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார் என கூறப்படுகிறது.

வடகொரிய அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து 8 முறை மட்டுமே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட கிம், ரயில் பயணத்தையே எப்போதும் தேர்வு செய்ததாகவும் தெரிகிறது. அண்டை நாடுகளை அணு ஆயுத சோதனைகளால் அச்சுறுத்தும் அதிபர் கிம், பாதுகாப்பு அச்சத்தாலே இந்த ரயிலில் பயணிக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com