
வட கொரியா நாட்டில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என அந்த நாடு உலக பொது சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புதிய அறிக்கையை உலக பொது சுகாதார நிறுவனமும் வெளியிட்டுள்ளது.
சுமார் 30,348 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட 60,422 பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என வட கொரியா தெரிவித்துள்ளது. அதில் 149 நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் இருந்த நிலையில் அவர்களுக்கும் தொற்று பாதிப்பு எதுவும் உறுதியாகவில்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது.
தனது பிராந்தியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என தொடர்ந்து சொல்லி வருகிறது வடகொரியா. அதே நேரத்தில் உலகளாவிய தடுப்பூசி தேவைக்கான காசி (GAZI) நிறுவனத்திடம் கொரோனா தடுப்பு மருந்து வேண்டும் என வடகொரியா தெரிவித்துள்ளது. அந்த நிறுவனமும் 1.7 மில்லியன் ஆஸ்ட்ராசென்கா தடுப்பூசிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக நாடுகளில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வட கொரியாவின் தயார்நிலை முதலியவற்றை கருத்தில் கொண்டு அதை வழங்காமல் உள்ளது காசி.
அதே நேரத்தில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்தும் வடகொரியா ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.