வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை முதல் முறையாக சந்தித்து மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கியது,இரு நாட்டுத் தலைவர்களும் கசப்புணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு முதல் முறையாக சந்தித்திருப்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அடுத்தடுத்து நடத்திய அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீப கற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. ஜப்பான் வான் எல்லை வழியாக ஏவுகணை செலுத்தி நடத்தப்பட்ட சோதனையாலும், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற சூழலை ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை பணிய வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தன. ஐ.நா. மூலம் பல்வேறு தடைகளும் விதிக்கப்பட்டது.
எனினும் கிம் ஜாங் உன் மிரட்டல் விடுக்கும் வகையிலேயே சோதனைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வந்தார். இத்தகைய சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் போர் மேகத்தை கலைத்து, நட்புக் கரம் நீட்டும் வகையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதிரடியாக மனம் மாறிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தார். அத்துடன் அணு ஆயுத சோதனைகளையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார்.
தவிர கொரிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக இரு நாட்டு எல்லைப் பகுதியில் தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அழைப்பு விடுத்தார். இதற்கு தென்கொரியாவும் இசைவு தெரிவித்ததை அடுத்து வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று நிகழ்ந்துள்ளது. இரு நாட்டு எல்லையில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் கொரிய தலைவர்கள் சந்தித்து பரஸ்பரம் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக் கொண்டனர். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் இரு நாட்டு தலைவர்களுக்கும் தென் கொரிய சிறுவர், சிறுமியர் பூங்கொத்துகளை கொடுத்து பேச்சுவார்த்தை நடக்கும் அமைதி கிராமத்துக்கு வரவேற்றனர்.