நோபல் பரிசையே ஏற்க மறுத்த இருவர்!

நோபல் பரிசையே ஏற்க மறுத்த இருவர்!

நோபல் பரிசையே ஏற்க மறுத்த இருவர்!
Published on

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசையே பெற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இரண்டு பேர்தான்.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிய விருதை வாங்க மறுத்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர்தான். 1964ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் ஜீன் பால் சாத்ரேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். தான் எப்போதும் ஒரு எழுத்தாளனாக இருப்பதையே விரும்புவதாகவும், இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட விருதுகளால் நிலை மாறுவதை தான் ஒரு போதும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கிழக்கு மற்றும் மேற்கத்திய சமூகத்தினரிடையே பிளவு ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு மேற்கத்திய அமைப்பு வழங்கக்கூடிய பரிசை தான் பெற விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இதன் மூலம் உலக வரலாற்றில் நோபல் பரிசை மறுத்த முதல் நபரானார் சாத்ரே.

இதேபோன்று 1973ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வியட்நாம் விடுதலை இயக்கத் தலைவர் லீ டக் தோவுக்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்ஜெர்க்கும் பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வர ஆற்றிய சேவைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்தது. ஆனால் இன்னும் வியட்நாமில் அமைதி ஏற்படவில்லை என்றும், அமெரிக்கா மற்றும் வியட்நாம் அரசுகள் அமைதி ஒப்பந்தத்தை மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறிய லீ டக் தோ விருதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

1938 மற்றும் 1939ஆம் ஆண்டுகளில் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னரும் மூன்று பேர் நோபல் பரிசினை பெற்றுக்கொள்ளவில்லை. ரிச்சர்ட் குன், அடோல்ஃப் புடெனன்ந் மற்றும் ஜெர்ஹார்ட் டோமக் ஆகிய மூவரும், ஹிட்லரின் உத்தரவால் பரிசினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் எந்தத் தடையும் இல்லாத நிலையிலும் நோபல் பரிசினை பெற்றுக்கொள்ள மறுத்தவர்கள் ஜீன் பவுல் சாத்ரேவும் லீ டக் தோவும்தான். நோபல் பரிசு பெறாததால் இவர்களுக்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடவில்லை. இவர்களை வரலாறு அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com