’13 முறை கைது, 154 கசையடிகள்.. 31 ஆண்டு சிறை’ - அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரான் போராளிப் பெண்!

ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்கீஸ் முகமதி
நர்கீஸ் முகமதிட்விட்டர்

ஆண்டுதோறும் 6 துறைகளில் நோபல் பரிசு

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளின் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவ நோபல் பரிசுக்குரியவர்கள்
மருத்துவ நோபல் பரிசுக்குரியவர்கள்

இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

கடந்த 2-ம் தேதி முதல் மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு எம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக கேட்டலின் கரிக்கோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட இருக்கிறது.

நர்கீஸ் முகமதி
Covid-19 தடுப்பூசி கண்டுபிடிப்புக்காக 2 மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு, பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக பியர் அகோஸ்டினி (அமெரிக்கா), பேரன்க் கிராஸ் (ஜெர்மனி), அன்னே எல்'ஹுல்லியர் (ஸ்வீடன்) ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கிறது.

நர்கீஸ் முகமதி
மின்னணு ஆற்றல் தொடர்பான ஆய்வு - இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு!
இயற்பியல் நோபல் பரிசுக்குரியவர்கள்
இயற்பியல் நோபல் பரிசுக்குரியவர்கள்ட்விட்டர்

3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!

வேதியியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் புள்ளிகளைக் கண்டறிந்து தொகுத்ததற்காக மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது.

நர்கீஸ் முகமதி
”எங்களை மன்னிச்சிடுங்க..” - வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பில் நடந்த தவறு!
வேதியியல் நோபல் பரிசுக்குரியவர்கள்
வேதியியல் நோபல் பரிசுக்குரியவர்கள்ட்விட்டர்

நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸ்க்கு வழங்கப்பட்ட இருக்கிறது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் நோபல் பரிசு அறிவிப்பான நிலையில், இன்று (அக். 6) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அது, ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய நோபல பரிசுக்குரியவர்
இலக்கிய நோபல பரிசுக்குரியவர்ட்விட்டர்

ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்த வலியுறுத்திப் போராடியதற்காகவும் சிறையில் அடைக்கப்பட்ட ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமைதி நோபல் பரிசுக்குரியவர்
அமைதி நோபல் பரிசுக்குரியவர்ட்விட்டர்

நோபல் கமிட்டி சொல்வது என்ன?

இதுதொடர்பாக நோர்வே நோபல் கமிட்டி, ’இது, நர்கீஸ் முகமதியின் துணிச்சலான போராட்டத்திற்கு, கிடைத்து இருக்கும் வெகுமதி. ஈரானிய அரசு, அவரை 13 முறை கைதுசெய்துள்ளது. ஐந்து முறை அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். 154 கசையடிகள் கொடுத்தனர். முகமதி இன்னும் சிறையிலேயே இருக்கிறார்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: AsianGames2023: சாய் கிஷோர், வாஷிங்டன் சுழலில் சுருண்ட வங்கதேசம்.. இறுதிப்போட்டியில் இந்திய அணி!

யார் இந்த நர்கீஸ் முகமதி?

ஈரானின் வடமேற்கில் உள்ள ஜன்ஜான் என்ற இடத்தில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். இமாம் கொமேனி சர்வதேச பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்ற அவர், மாணவர் காலந்தொட்டே சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார். பின்னர், படிப்பை முடித்த பிறகு, அவர் ஒரு பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அதன்பிறகு பத்திரிகைத் துறைக்கு மாறிய அவர், தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை குறித்த கட்டுரைகளை எழுதி வந்தார். அத்துடன் சீர்திருத்த இயக்கங்களுடன் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார்.

நர்கீஸ் முகமதி
நர்கீஸ் முகமதிட்விட்டர்

மரண தண்டனைக்கு எதிராகப் போராடிய முகமதி!

கடந்த 2003ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடியால் ஈரானில் நிறுவப்பட்ட மனித உரிமைகளின் பாதுகாவலர் மையத்தில் அவர் இணைந்தார். அப்போது முதல் அவர் பெண் உரிமை, அனைவருக்குமான சமத்துவம், ஆகியவற்றை வலியுறுத்தியும் மரண தண்டனையை ஒழிப்பது குறித்தும் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தார். அவர் கடந்த 2011இல் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த முகமதி, பின்னர் 2013இல் ஜாமீன் பெற்றார். அதன்பிறகு மரண தண்டனைக்கு எதிரான தனது போராட்டங்களை அவர் தீவிரப்படுத்தினார். இதையடுத்து அவர் மீண்டும் 2015இல் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோதும் அமைதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்தார். மேலும், சிறையிலும் அவர் ​அரசியல் கைதிகள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் சித்ரவதை மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்தார்.

இதையும் படிக்க: சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள்: பீகார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

உயிரிழந்த மஹ்சா அமினிக்காகப் போராடிய முகமதி!

கடந்த ஆண்டு (2022) புர்கா விவகாரத்தில் ஈரான் நாட்டின் கலாசார போலீசாரால் மஹ்சா அமினி என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ’பெண் - வாழ்க்கை - சுதந்திரம்’ என்பதை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தின் மூலமும் நர்கீஸ் முகமதி பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. மஹ்சா அமினியின் கொலையைக் கண்டித்து முகமதி சிறையிலேயே போராட்டம் நடத்தினார். இதனால் சிறையில் அவருக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போதும் அவர் சிறையிலே உள்ள நிலையில், நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசில் இன்னும் பொருளாதாரத்துக்கான பரிசு மட்டும் அக். 9ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி இப்பரிசுகள் வழங்கப்படும்.

இதையும் படிக்க: வங்கிகளில் மக்கள் கைவிட்ட தொகை மட்டும் ரூ. 35,000 கோடி! உங்கள் பணம் இருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com