‘முகக்கவசம் அணிய தேவையில்லை’ - தடுப்பூசியால் சுதந்திர காற்றை சுவாசிக்கும் இஸ்ரேல் மக்கள்!
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம், தண்டனை என உலக நாடுகள் உத்தரவு பிறப்பித்து வரும் வேளையில், இஸ்ரேல் நாடு மட்டும் பொதுமக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அறிவித்துள்ளது.
மாஸ்க் இல்லாத வாழ்க்கை எப்போது மீண்டும் நமக்கு கிடைக்கும்? எப்போது சுதந்தரமாக நாம் சுவாசிக்கப் போகிறோம்? என அனைவரையும் ஏங்க வைத்துவிட்டது கொரோனா வைரஸ். மாஸ்க் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. வெளியில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ? அவ்வளவு நேரமும் நமது முகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன மாஸ்க்குகள்.
கொரோனா நம் உடலுக்கு நுழையாமல் பாதுகாப்பு முதல் கவசமே இந்த மாஸ்க் தான். எனவே முற்றிலும் கொரோனா அழியும் வரை மாஸ்கில் இருந்து விடுதலை கிடையாது. ஆனால் இஸ்ரேல் மக்களுக்கு இனி அந்த அச்சம் தேவையில்லை. மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிய தேவையில்லை என அரசே அறிவித்துவிட்டது. ஓராண்டு காலமாக அமலில் இருந்த மாஸ்க் கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளது இஸ்ரேல் அரசு. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா அச்சத்தில் இருந்து விடுபடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகி இருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகை 95 லட்சம். இங்கு 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. அமெரிக்காவின் ஃபைசர் கொரோனா தடுப்பூசி தான் இங்கு பயன்பாட்டில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இங்கு 53 லட்சம் பேர் அதாவது மக்கள் தொகையில் 57 விழுக்காடு நபர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். அதிலும் 50 லட்சம் பேர் இரண்டாவது டோஸும் பெற்று கொண்டனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய செய்தி. தடுப்பூசி போட தொடங்கிய சில வாரங்களில் இருந்து இங்கு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் இரண்டாவது டோஸும் போட்டுக் கொண்ட பிறகு பாதிப்பு பெருமளவில் குறைந்திருப்பதாக இஸ்ரேல் அரசு கூறுகிறது.
தற்போதைக்கு பொது இடங்களில் மாஸ்க் தேவையில்லை என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மூடிய அறைகளில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாஸ்க் அணிய வேண்டும் என அரசு கூறியுள்ளது. இஸ்ரேலில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் முதல் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது என்றும் இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. பொருளாதாரமும் மெல்ல மீள தொடங்கியுள்ளது. நம்பிக்கையுடன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர் இஸ்ரேல் மக்கள்.