கொரோனா எதிரொலி: கைகுலுக்க மறுத்த அமைச்சரால் சிரிப்பலை!
70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள மனித கொல்லி வைரஸான கொரோனாவுக்கு, சீனாவில் மட்டும் 2,900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரானில் 66 பேர் கொரானா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். அங்கு 1,500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இத்தாலியில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு 1,700க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் 26 பேரும், ஜப்பானில் 6 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஹாங்காங், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தலா இரண்டு பேரும், தாய்லாந்து, தைவான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தீவிரமாக பரவி வரும் இந்த வைரஸால் 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பல நாடுகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், அங்கு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சருக்கு மரியாதை நிமித்தமாக கைகுலுக்க கைகளை நீட்டினார். ஆனால் அமைச்சரோ, கொரோனா தற்பாதுகாப்புக்காக கைகொடுக்காமல் தலையை மட்டுமே அசைத்து மரியாதையை தெரிவித்தார்.
உடனடியாக அந்த இடமே சிரிப்பால் அதிர்ந்தது. அமைச்சரின் செயலைக் கண்டு சிரித்த ஏஞ்சலா மெர்க்கலும் சிரித்துக்கொண்டே தலையை அசைத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து கருத்து தெரிவித்த ஏஞ்சலா, அமைச்சர் சரியாகத்தான் செய்தார் என பாராட்டு தெரிவித்தார். ஜெர்மனியில் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாடு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.