இஸ்ரோ ஒரு நாள் சாதிக்கும்: பூடான் பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரோந்திர மோடியும் இஸ்ரோவும் இணைந்து ஒரு நாள் சாதிப்பார்கள் என்று பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப் பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்தது லேண்டர். தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது. விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி, கடைசிவரை போராடிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்றார். நிலவைத் தொடும் இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், பிரதமர் மோடிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவித் துள்ளார். அவர், ‘’ இந்தியா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பற்றி இன்று பெருமைப்படுகிறோம். ’சந்திரயான் 2’ கடைசி நிமிடத்தில் சில சவால்களைக் கண்டது, ஆனால் உங்கள் தைரியமும் கடின உழைப்பும் வரலாற்றில் இடம்பெறும். பிரதமர் நரேந்திர மோடி பற்றி எனக்குத் தெரியும். அவரும் அவரது இஸ்ரோ குழுவும் ஒரு நாள் அதை சாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.