“நிரவ் மோடியால் என் திருமணமே நின்றது” - அல்போன்சா புதிய வழக்கு
நிரவ் மோடி கொடுத்த போலி வைர மோதிரத்தால் என்னுடைய திருமண வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விட்டதாக கனடாவைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரும் சட்ட விரோதமாக கடன் வாங்கி ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்நிலையில் நிரவ் மோடி கொடுத்த போலி வைர மோதிரத்தால் தன்னுடைய திருமணமே நின்றுவிட்டதாக கனடாவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த அல்போன்சா என்பவர் 2012 ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் நிரவ் மோடியை சந்தித்துள்ளார். இருவரும் பரஸ்பர நட்பு பாராட்டி நண்பர்களாகி உள்ளனர். சில வருடங்கள் உருண்டோடிய நிலையில் அல்போன்சா, நிரவ் மோடிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் அதற்கு விலைமதிப்பான வைர மோதிரம் வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு பிரத்யேகமாக ஒரு மோதிரத்தை அனுப்பவதாக கூறிய நிரவ் மோடி ரூ.80 லட்சத்துக்கு மோதிரம் ஒன்றை அனுப்பியுள்ளார். மோதிரம் பிடித்துப்போன அல்போன்சாவின் காதலி வேறொரு மோதிரத்தையும் ஆர்டர் செய்துள்ளார். இந்திய மதிப்பில் ஒன்றைரை கோடிக்கு வாங்கப்பட்ட இரண்டு மோதிரத்துக்கான சான்றிதழ் கிடைக்காத நிலையில் நிரவ் மோடியிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இது குறித்து விசாரித்த போது நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்து அல்போன்சா தெரிந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில்தான் ஏமாற்றப்பட்டதால் காதலியும் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், தனது திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அல்போன்சா, நிரவ் மோடிக்கு கோபமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ''என் காதலியை நீங்கள் பிரித்துவிட்டீர்கள். இதன் வலியை உங்களால் உணர முடியுமா? எங்களது அழகான குடும்ப வாழ்க்கையை நீங்கள் பாழாக்கி விட்டீர்கள்'' என கோபத்துடன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அல்போன்சா நிரவ் மோடிக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

