அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 48 மணி நேரத்தில் 3 சம்பவங்கள்: 9 பேர் பலி
அமெரிக்காவில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த 3 வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக துப்பாக்கி வைத்துக் கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த சூழலில் அமெரிக்காவில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த 3 வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பிலாடெல்ஃபியா பகுதியில் துப்பாக்கியுடன் பலர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் கூட்டம் மிகுதியான இடத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். இதனை காவல் துறை உறுதி செய்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில் டென்னசியின் சட்டனூகா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில், மிச்சிகனில் உள்ள சாகினாவில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் அந்நாட்டில் 240 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்கலாம்: எல்லா ஆன்லைன் வகுப்பிலும் மாணவியுடன் பங்கேற்ற பூனைக்கு பாராட்டு தெரிவித்த பல்கலைக்கழகம்!

