79 ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்த பாதி சுருட்டு.. அடுத்த மாதம் ஏலம்!

79 ஆண்டுகளுக்கு முன்பு சர் வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்த பாதி சுருட்டு, அடுத்த மாதம் ஏலத்தில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சில், சுருட்டு
சர்ச்சில், சுருட்டுtwitter page

1940 - 1945 மற்றும் 1951 - 1955 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். 1965ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய 90 வயதில் இறந்த சர்ச்சிலுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இவர், சுருட்டு பிடிக்கும் பழக்கமுடையவர். அந்த வகையில், அவர் 79 ஆண்டுகளுக்கு முன்பு புகைப்பிடித்த பாதி சுருட்டு ஒன்று அடுத்த மாதம் ஏலம் விடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து இங்கிலாந்து ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”1944இல் மொராக்கோவின் ரபாத்தில் உள்ள தூதரக ஜெனரலாக இருந்த ஹக் ஸ்டோன்ஹெவர் பேர்ட் என்பவருக்கு, பிரிட்டனின் போர்க்கால பிரதமராக இருந்த சர்ச்சில் தாம் பிடித்த பாதி சுருட்டு ஒன்றைப் பரிசாக வழங்கியதாகவும், அதை ஹெவர் பேர்ட்டின் குடும்பத்தினர்கள் தற்போது ஏலம்விட இருக்கிறார்கள்” எனவும் அது தெரிவித்துள்ளது.

சுருட்டு ஏலம் தொடர்பாக ஹக் ஸ்டோன்ஹெவர் பேர்டின் குடும்பத்தினர், ”சர்ச்சில், தாம் பாதி புகைப் பிடித்த சுருட்டை, பேர்டிடம் கொடுத்துள்ளார். அதை, அவர் 1973ஆம் ஆண்டு இறக்கும்வரை பொக்கிஷமாக வைத்திருந்தார். தற்போதும் அது கண்ணாடிக் குடுவைக்குள் பொக்கிஷமாய் உள்ளது. தற்போது நாங்கள் அதைக் கண்டுபிடித்துள்ளோம். இதனால் அதை விற்க வேண்டிய நேரம் வந்துள்ளது. வரும் ஜூன் 16ஆம் தேதி டெர்பிஷையரைச் சேர்ந்த ஹான்சன்ஸ் ஏலதாரர் நிறுவனத்தால் இந்த நினைவுப் பொருள் ஏலம் விடப்பட இருக்கிறது. இதனால், 900 பவுண்டுகள் (ரூ. 92,078) கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், “எங்களது முன்னோர் சிறந்த சர்ச்சில் ரசிகர்களாக இருந்தனர். அவர்கள் சர் வின்ஸ்டன் புகைப்படம் மற்றும் நகைச்சுவையான உருவத்துடன் சுருட்டை காட்சிக்கு வைத்திருந்தனர். அதைத்தான் தற்போது ஏலம்விட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

”இது பிரிட்டனின் மிகவும் பிரபலமான பிரதமர் மற்றும் இரண்டாம் உலகப் போருடன் இணைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். சர்ச்சில் சுருட்டுகளை விரும்பும் பழக்கமுடையவர். அவர், எப்போதாவது தனக்கு எந்த வகையிலாவது உதவியவர்களுக்கு சுருட்டுகளை பரிசாக வழங்கியுள்ளார்" என்று ஹான்சன்ஸ் ஏல நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஹான்சன் தெரிவித்துள்ளார்.

ஸ்டோன்ஹெவர் பேர்ட் இறந்த பிறகு, அவர் பாதுகாத்த இந்த சுருட்டை அவரது அடுத்தடுத்த அடுத்தடுத்த தலைமுறையினரும் பாதுகாத்து வந்துள்ளனர். பாதுகாக்கப்பட்டு வரும் அந்த சுருட்டு உள்ள ஜாடியில், ’இந்த சுருட்டு, வின்ஸ்டன் சர்ச்சில் முன்னாள் தூதரகத்தால் வழங்கப்பட்ட இரவு விருந்தின்போது புகைக்கப்பட்டது’ என ஸ்டோன்ஹெவர் பேர்ட் ஒரு லேபிளை ஒட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com