நொடியில் விழுந்து நொறுங்கிய புதிய பாலம்.. சீனாவின் உள்கட்டமைப்புக்கு 2வது பெரிய தோல்வி!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட மிகப்பெரிய பாலமான ஹாங்கி பாலம் இடிந்து விழுந்ததாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
தென்மேற்கு சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் மேர்காங்கில், மத்திய சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஹாங்கி என்கிற பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்துக்காக, சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இது, 758 மீட்டர் நீளமுடையது. இப்பாலம், சிச்சுவான் மற்றும் திபெத் இடையே ஒரு முக்கியமான போக்குவரத்து இணைப்பாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், இப்பாலத்தின் ஒரு பகுதி, நேற்று பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இதில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இடிந்து விழும் பாலத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலத்திற்கு அருகில் நிலச்சரிவுகள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் தோன்றியதாலும், அருகிலுள்ள மலையில் நிலப்பரப்பு மாற்றங்கள் கண்டறியப்பட்டதாலும், தற்போதைக்கு பாலம் மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக ஆய்வு நடத்திவரும் அதிகாரிகள், ‘நிலச்சரிவுகளின் வரலாற்றைக் கொண்ட செங்குத்தான மலைப் பகுதியில் நிலவிய உறுதியற்ற தன்மையே இந்த சரிவுக்குக் காரணம்’எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தப் பேரழிவிற்கு ஏதேனும் கட்டமைப்பு அல்லது பொறியியல் குறைபாடுகள் காரணமாக இருக்கலாமா என்பதைக் கண்டறிய விரிவான தொழில்நுட்ப விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள், இதுகுறித்து எந்த கட்டுமானப் பிரச்னைகளையும் சுட்டிக்காட்டவில்லை என்றாலும், சீனாவில் மற்றொரு உயர்மட்ட உள்கட்டமைப்பு தோல்வி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம், கிங்காய் மாகாணத்தில் கட்டுமானத்தில் இருந்த ஒரு ரயில்வே பாலம் கேபிள்-பதற்றம் நடவடிக்கையின்போது இடிந்து விழுந்ததில் குறைந்தது 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காணாமல் போயினர். தற்போது, இந்த ஹாங்கி பாலம் விழுந்திருப்பது உயர்மட்ட உள்கட்டமைப்பின் மற்றொரு தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

