குழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் !
நியூசிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் கூட்டத்தின் போது குழந்தையை பார்த்து கொண்டதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நியூசிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் ட்ரவோர் மல்லார்ட். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு எம்பிக்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வர அனுமதியளித்தார். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களின் குழந்தைகளை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தார்.
இந்நிலையில் நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பெட்ரோல் டீசல் விலை குறித்த காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது எம்பி ஒருவர் தனது குழந்தையை வைத்திருந்தார். அவர் இந்த விவாதத்தில் பங்கேற்க முயன்ற போது அவரின் குழந்தையை சபாநாயகர் மல்லார்ட் தன்னிடம் கொடுக்கும் படி கூறியுள்ளார். அதன்பின்னர் அந்தக் குழந்தையை தன்னுடன் வைத்து கொண்ட சபாநாயகர் அக்குழந்தைக்கு பாட்டீலில் பால் கொடுத்தார். இவரின் இந்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.
இதுகுறித்து ட்ரவோர் மல்லார்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுவாக சபாநாயகர் நாற்காலியில் சபாநாயகர் மட்டுமே அமர்வார்கள். ஆனால் இன்று ஒரு சிறப்பு விருந்தினர் அங்கு வந்து என்னுடன் அமர்ந்திருந்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே உலகளவில் பதவியிலிருந்து மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பிரதமர் என்ற பெருமையை நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் பெற்றியிருந்தார். அதன்பின்னர் தனது குழந்தையுடன் ஐநாவின் பொது கூட்டத்தில் பங்கேற்றார். இவரின் இந்தச் செயலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.