நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் திருமணம்..?
திருமணத்திற்கான தேதி கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.
நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகிப்பவர் ஜெசிந்தா ஆர்டென் (வயது 40). இவருக்கு, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (வயது 44) என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது. திருமணத்துக்கு முன்பே இணைந்து வாழும் இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், வரும் கோடைக்காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், திருமண தேதியை பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் வெளியிடவில்லை.
இதுபற்றி ஜெசிந்தா கூறும்பொழுது, ''திருமணத்திற்கான தேதி கிடைத்து விட்டது. இந்த அறிவிப்பினால் நாங்கள் அனைவரிடமும் திருமண தகவலை கூறிவிட்டோம் என்று அர்த்தமல்ல. அதனால், முறைப்படி அழைப்பு விட வேண்டும். எனினும், திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெறாது” என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.