காதலர் தினத்தில் பூமியை தாக்க இருக்கும் புதிய விண்கல்! நாசா விஞ்ஞானிகள் சொன்ன தகவல்

காதலர் தினத்தில் பூமியை தாக்க இருக்கும் புதிய விண்கல்! நாசா விஞ்ஞானிகள் சொன்ன தகவல்
காதலர் தினத்தில் பூமியை தாக்க இருக்கும் புதிய விண்கல்! நாசா விஞ்ஞானிகள் சொன்ன தகவல்

2046ஆம் ஆண்டு பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கணித்துள்ளது.

சூரியனை சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றுவதுபோல பூமியின் சுற்றுவட்டப் பாதையிலும் பல சிறு கோள்களும் விண்கற்களும் கடந்துசெல்கின்றன. இத்தகைய சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லும்போது சில நேரங்களில் மிக அரிதாக பூமி மீது மோதுவதும் உண்டு. ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

'2023 டி.டபிள்யு' என்ற விண்கல்

2046ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, '2023 டி.டபிள்யு' என்ற விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த விண்கல் 2023 பிப்ரவரி 28இல் கண்டறியப்பட்டதாகவும், அதன் விட்டம் 165 அடியாகவும், இது மணிக்கு 24.64 கி.மீ. வேகத்தில் சுற்றுவதாகவும், இது, தன் சுற்றுப்பாதையை ஒருமுறை சுற்றி முடிக்க 271 நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்கல் எங்கு விழும் தெரியுமா?

தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் இந்த சிறுகோளானது, ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிற்கு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விண்கல் இந்தியப் பெருங்கடல் - பசிபிக் கடல், அமெரிக்காவின் மேற்கு - கிழக்குக் கடற்கரை பகுதிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களான ஏதாவது ஒன்றில் '560க்கு ஒன்று' என்ற விகிதத்தில் விழுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கும் வாய்ப்பு இல்லாமலும் போகலாம்!

அதேநேரத்தில், இது, புதிய விண்கல் என்பதால் அதன் சுற்றுப்பாதையை கணிப்பதற்கு நீண்டநாட்கள் தேவை என்பதால், எதிர்காலத்தில் இது பூமியை தாக்கும் வாய்ப்பு இல்லாமலும் போகலாம் எனவும் நாசா விண்வெளி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாசா தனது ட்விட்டரில், "விண்ணில் புதிய பொருள்கள் கண்டறியப்படும்போது சுற்றுவட்டப் பாதையில் அது செல்லும் திசை உள்ளிட்டவற்றை கணிக்க சில வாரங்களுக்கும் மேலான டேட்டாக்கள் தேவைப்படுகின்றன" என தெரிவித்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com