இஸ்ரேல் நாட்டுக்கு பயணமாகியுள்ள முதல் இந்தியப் பிரதமரான மோடியைக் கெளரவிக்கும் வகையில், இஸ்ரேலிய க்ரைசாந்துமுன் என்ற மலருக்கு 'மோடி' என்று பெயர்சூட்டப்பட்டது.
இஸ்ரேல் சென்றுள்ள முதல் இந்தியப் பிரதமரான மோடிக்கு, டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள டென்சிகர் மலர் பண்ணையைப் பார்வையிட்டார் மோடி. பிரதமர் மோடிக்கு மரியாதை செய்யும் விதமாக, இஸ்ரேலிய க்ரைசாந்துமன் என்ற மலருக்கு 'மோடி' என்று பெயர்சூட்டப்பட்டது. “இஸ்ரேலிய க்ரைசாந்துமன் என்ற மலர், வேகமாக வளரக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. இந்தியப் பிரதமரை கெளரவிக்கும் விதமாக, இந்த மலருக்கு ‘மோடி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது” என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான கோபால் பாக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

