
ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த பெண் படை வீரர் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 7ஆம் நாள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், 220க்கும் அதிகமானவர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இவர்களில் நான்கு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், ஓரி மெகிதிஷ் என்ற பெண் ராணுவ வீரர் ஹமாஸ் பிடியில் இருந்து மீட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட ராணுவ வீரர் அவரது குடும்பத்தினரைச் சந்தித்ததாகக் கூறி அது தொடர்பான புகைப்படத்தையும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.
இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள காணொளியில், பிணைக்கைதிகளாக இருப்பவர்கள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து தங்களை
மீட்க வேண்டும் எனக் கோருவது இடம்பெற்றுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த காணொளியானது உணர்வு ரீதியான அழுத்தத்தை உருவாக்கும் ஹமாஸின் முயற்சி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.