‘தீட்டு என ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்’ - இரண்டு மகன்களுடன் இறந்த சோகம்
மாதவிடாய் காலத்தில் தீட்டு என வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் தனது இரண்டு மகன்களுடன் இறந்த சோக சம்பவம் நேபாளத்தில் நிகழ்ந்துள்ளது.
பெண்கள் உரிமை, பெண்கள் சுதந்திரம் என உலகமெங்கும் முழக்கங்கள் எதிரொலிக்கும் இந்தக் காலத்திலும், பெண்களுக்கு முழு உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக சில துயர சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ளது. நேபாளம் பஜூராவை சேர்ந்த பெண் போஹெரா (35). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் வாழ்ந்த குடும்பத்தில் பெண்களை மாதவிடாய் காலத்தில் வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கும் ஒரு மூட நம்பிக்கையான பழக்கம் இருந்து வருகிறது.
இதுபோன்று பெண்களை மாதவிடாய் காலங்களில் ஒதுக்கி வைப்பது குற்றம் என கடந்த 2017ஆம் ஆண்டே நேபாள அரசு அறிவித்தும், இன்னும் அங்கு விடிவு பிறக்கவில்லை. இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட போஹெரா, தனது இரண்டு மகன்களுடன் வீட்டிற்கு அருகே குடிசை அமைத்து தங்கியிருந்துள்ளார். அங்கு குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருந்துள்ளது. இதனால் நெருப்பு மூட்டி புகைமூட்டம் போட்டுள்ளார். புகையுடன் தூங்கி அந்த 3 பேரும் பரிதாபமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர். உலகம் எத்தனை நவீன யுகமாக மாறினாலும், இதுபோன்ற துயரங்கள் முழுவதும் மாறுவதாக இல்லை.
இந்தச் சம்பவத்திற்கு நாம் நேபாளம் வரை செல்ல வேண்டாம். தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறைகள் இன்னும் இருப்பது உண்மை. அண்மையில் கடந்து சென்ற கஜா புயலின் போது, பட்டுக்கோட்டை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி பூப்பெய்தியதால் வீட்டிலிருந்து தள்ளி வைக்கப்பட்டார். தென்னந்தோப்பில் குடிசை அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்ட அந்தச் சிறுமி, ‘கஜா’ புயல் கடந்து சென்றபோது மரங்கள் விழுந்து உயிரிழந்தார்.