நேபாள ராணுவத்துக்கு 1 லட்சம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கிய இந்திய ராணுவம்!
நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் சார்பில் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன.
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியின் அவரசக்கால பயன்பாட்டிற்கு நேபாளம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 2.86 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நேபாளத்தில் பொதுமக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த முடியும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது வரை 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. சர்வதேச அளவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் மூன்றாவது நாடு நேபாளம் ஆகும். தற்போது 55 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை நேபாள அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் சார்பில் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன. ‘ஏா் இந்தியா விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட இந்தத் தடுப்பூசிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் திரிபுவன் சா்வதேச விமான நிலையத்தில் நேபாள ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இந்தத் தடுப்பூசிகள் நேபாள ராணுவத்துக்கு உதவியாக இருக்கும்’ என காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரியில் நேபாளத்துக்கு 10 லட்சம் தடுப்பூசிகளையும், மருந்துகள், பரிசோதனைக் கருவிகளையும் இந்தியா வழங்கியிருந்தது. நேபாளத்தில் கொரோனாவால் இதுவரை 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.