நவாஸ் ஷெரிப் தண்டனையை இடைநீக்கம் செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு
உடல்நிலை பாதிப்பு காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தண்டனையை இடைநீக்கம் செய்யக் கோரி அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப், ஊழல் புகார் காரணமாக, பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள, கோட் லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஷெரீப்புக்கு, இதய நோயும் உள்ளது.
69 வயதாகும் அவருக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர், சிறிது நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், மருத்துவர்கள், “ நவாஸ் ஷெரிப் நிலைமை மிகவும் கவலைக்கிடம் இல்லை என்றாலும், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். தவறாமல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதயத்தின் முக்கிய வால்வுகளில் பாதிப்பு ஏற்படுள்ளது. அதற்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும்’’ என்றனர்.
இந்நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தண்டனையை இடைநீக்கம் செய்யுமாறு அவரது வழக்கறிஞர் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.